498. அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் - TPV17
திருப்பாவையின் 17வது பாசுரம்
கதவு திறந்திடவும், கோபியர் உள்ளே சென்று, நந்தகோபனையும், யசோதையையும்,பலதேவரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்
ராகம் கல்யாணி, ஆதி தாளம்.
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
எமக்கு ஆடையும், நீரும், பல்வகை உணவுப்பண்டங்களையும் தானமாக வாரி வழங்கும் எங்கள் தலைவரான நந்தகோபரே, தாங்கள் எழுந்திருக்கவேண்டும். வஞ்சிக் கொடி போன்ற மெல்லிய உறுதியான இடையுடைய பெண்களுக்கெல்லாம் தலைவியானவளும், நந்த குலத்திற்கு தீபம் போன்றவளும், ஸ்ரீ கிருஷ்ணரை எங்களுக்களித்த யசோதை பிராட்டியே, எழுந்தருளாய்! த்ரிவிக்ரம அவதார காலத்தில், வானளாவி ஓங்கி வளர்ந்து மூவுலகங்களையும் அளந்த தேவர் தலைவனே! விழித்தெழுவாய்! செம்பொன்னால் செய்த வீரக்கழலை அணிந்த திருவடிகளையுடைய செல்வத் திருமகனாய், பலதேவா! உன் தம்பியான கண்ணனும் நீயும் இனியும் உறங்காது எழுந்தருளவேண்டும்!
பாசுரச் சிறப்பு:
இப்பாசுரத்தில் நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் ஆகியோர் வரிசைக் கிரமமாக எழுப்பப்படுவதை முறையே ஆச்சார்யன், திருமந்திரம், திருமந்திரத்தின் பொருள், திருமந்திரத்தின் சாரம் (அஷ்டாட்சரம், மூலமந்திரம்) ஆகியவற்றின் சின்னங்களாகக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இதன் உள்ளுரையாம்.
யசோதையே, ஆயர் குலப் பெண்களுக்கு ஒரு சிறு துன்பம் வந்தாலும், மனம் கலங்குபவள். கோபியரின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளும் திறம் படைத்தவள்.அதனாலேயே, அவளை கொம்பனார்க்கெல்லாம் கொழுந்து என்றும், குல விளக்கு என்றும், அது போலவே ஆயர் குலத்தைக் காத்து, ஆயர் குலத்தவருக்கு வேண்டியதை தந்து அருளும் நந்தகோபர் எம்பெருமான் என்றும், (அதாவது, அவ்விருவருவரையும் பரமனுக்கும், பெரிய பிராட்டிக்கும் இணையான) மிக உயர்ந்த இடத்தில் வைத்து ஆண்டாள் கொண்டாடிப் பாடியுள்ளார்!
இன்னொன்று கவனிக்க வேண்டும், நந்தகோபருக்கு (அவரது தானம், பராக்கிரமம் மற்றும் செல்வத்தை முன்னிட்டு) திருப்பாவையில் 5 தடவை மங்களாசாசனம் செய்யப்படுள்ளது.
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய* கோயில் காப்பானே.
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்*
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்*
ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்!
அம்பரம் என்பது பரமபதத்தையும், தண்ணீர் என்பது வைகுண்டத்தில் பாயும் விராஜ நதியையும், சோறு என்பது உபநிடத ஞானத்தையும் குறிப்பில் உணர்த்துவதாக அன்னங்கராச்சார் சுவாமிகள் சொல்லும்போது, நந்தகோபன் பகவத் அனுபவத்தை அருள வல்லதொரு ஆச்சார்யனாகிறார்! ஆக நந்தகோபனை முதலில் எழுப்பவதாகச் சொல்வதன் மூலம், நமது உண்மையான ஸ்வரூபத்தை உணர, ஆச்சார்யனின் பங்கே முதன்மையானது என்பது வலியுறுத்தப்படுகிறது!
இன்னொரு விதத்தில், அம்பரம் என்பது ஆத்மசுத்தியையும், தண்ணீர் என்பது அதை வளர்க்க வல்ல (அகந்தை, அஞ்ஞானத்தை விலக்கி) உபாயத்தையும், சோறு என்பது பரம புருஷார்த்தத்தையும்(முக்தி) குறிப்பில் உணர்த்துவதாம். இம்மூன்றையும் அளிக்கவல்லவன் ஆச்சார்யனே என்பதால், நந்தகோபன் ஆச்சார்யன் ஆகிறான்...
"அம்பரமே தண்ணீரே சோறே" எனும்போது, தனது தந்தையான நந்தகோபாரைப் போலவே, கிருஷ்ணனும் திரௌபதிக்கு (அவள் மானத்தைக் காக்க) ஒரு தடவை வஸ்திரம் வழங்கியதியும், குருஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்து குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கியதையும், கோகுலத்தில் சிறுவனாக வாழ்ந்தபோது, தனது நண்பர்களுக்கு வெண்ணெய் தந்ததையும் எண்ணிப் பார்க்க முடிகிறது இல்லையா?
நியாயமாக, "அம்பரமும் தண்ணீரும் சோறும்" என்று தானே இலக்கண சுத்தமாக ஆண்டாள் பாடியிருக்க வேண்டும்! ஆனால், "அம்பரமே தண்ணீரே சோறே" என்று பாடுவதன் வாயிலாக ஆண்டாள் இரண்டு விஷயங்களை உணர்த்துகிறார்!
1. இம்மூன்றில் ஏதாவது ஒன்றைக் கேட்டால் கூட, மற்ற இரண்டையும் சேர்த்தே வழங்குவார் நந்தகோபர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
2. இம்மூன்றையும் ஆயர் குலத்தவருக்கு அவர்க்கு வேண்டிய அளவுக்கு மேலாக வாரி வழங்குவார் என்பது.
மேலும், "அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா" என்று கோபியர் பாடுபோது, அவர்கள் அப்பொருட்களை வேண்டி அவரிடம் வரவில்லை! கோபியர்க்கு ஆடையாகவும், நீராகவும், உணவாகவும் (எல்லாம் ஆகவும்) இருக்கும் கண்ணனை தங்களுடன் அனுப்பி தங்களை உய்விக்குமாறு, நந்தகோபரிடம் வேண்டுவதாக பார்க்க வேண்டும்! அதோடு, நந்தகோபரை "எம்பெருமான் நந்தகோபாலா" என்று கோபியர் பகவானின் திருநாமத்தைச் (கோபாலா!) சொல்லி அழைப்பதிலிருந்தே அவர்கள் வந்திருப்பது கண்ணனுக்காகவே என்பது தெளிவு!
நம்மாழ்வார் இவ்விஷயத்தைத் தானே, "உண்ணும் சோறு, பருகுநீர், தின்னும் வெற்றிலை எல்லாமும் கண்ணனே" என்று கடலை ஒத்த பேரன்போடு ஒரு பாசுரத்தில் அருளியிருக்கிறார்! இத்தனைக்கும் குருகையூர் கோன் ஒரு புளியமரப் பொந்தில், ஆகாரம், நீர் இன்றி 16 ஆண்டுகள் யோக நிலையில் வீற்றிருந்தவர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும் :-)
ஸ்ரீவைஷ்ணவத்தின் மூன்று ரகசியங்கள் குறிப்பில் வெளிப்படுவதாகவும் பெரியோர் கூறுவர்
அம்பரம் = ஓம் (ப்ரணவம்)
தண்ணீர் = நமோ (சரணாகதி)
சோறு = நாராயணா (பரத்துவம்)
இப்பாசுரத்தில் திரிவிக்ரம அவதாரம் (அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே!) போற்றப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தைப் போலவே வாமன அவதாரமும் அதன் சௌலப்யத்தால், ஆண்டாளைக் கவர்ந்த ஒன்று என்பதால் தானோ, திருப்பாவையில் 3 இடங்களில் அது போற்றப்பட்டுள்ளது!
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி*
அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
இதில் ஒரு தாத்பர்யமும் உள்ளது. கோபியர் காணும் கண்ணனின் சயன கோலமானது (ஒரு காலை நிலத்தில் வைத்து மற்றதை அதன் மேல் வைத்திருப்பது) அவர்களுக்கு பரமனின், மண்ணும் விண்ணும் அளந்த, திரிவிக்ரம கோலத்தை ஞாபகப்படுத்துவதாக அமைந்தது என்பதை ஆண்டாள் நயமாகப் பாடுவதாக நாம் எண்ண முடியும் தானே! மேலும், திரிவிக்ரம அவதார கோலத்தைக் காணும் பெரும்பேறு பெற்ற தேவர்கள் பலரே, கோகுலத்தில் கோபியராக பிறப்பெடுத்து கண்ணனின் அருகாமையில் இருக்கும் நற்கதி பெற்றனர் என்பதும் நமக்குத் தெரிந்தது தானே!
இங்கே திரிவிக்ரம அவதாரத்தைப் பாடி கோதை நாச்சியார் கண்ணனை துயிலெழுப்புகிறார்,அவரது தந்தையான பெரியாழ்வாரோ, தனது தாலாட்டில் அதைச் சுட்டிக் காட்டி, கண்ணனை உறங்கச் சொல்கிறார் :-)
மாணிக்கம் கட்டி *வயிரம் இடைகட்டி*
ஆணிப்பொன்னால் செய்த *வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி உனக்குப்* பிரமன் விடுதந்தான்*
மாணிக்குறளனே. தாலேலோ*
வையமளந்தானே. தாலேலோ.
நந்தகோபரையும் யசோதையும் எழுப்பிய பின், கோபியர் கண்ணனை எழுப்பச் சென்று, அவன் கண் விழிக்காதபோது, பலராமருக்கு முன் கண்ணனை எழுப்ப முனைந்த தங்கள் தவறை உணர்ந்து, இருவரையும் சேர்த்து துயிலெழுப்புவதாக ஆண்டாள் நாச்சியார் பாடியிருப்பது ரசமான ஒன்று.
அதோடு, இருவரையும் சேர்த்து எழுப்புவது போல பாடி, ஆண்டாள் பகவத் சேவையும், பாகவத சேவையும் பிரிக்க முடியாவை என்பதை அழகாகச் சொல்லி விடுகிறார்! மேலும், பலராமனின் திருவடிகள் போற்றப்படுவதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறது.
ராமாவதாரத்தில், இலக்குமணன் பரமனுக்குப் பின் அவதரித்து, அவனுக்கு சேவை செய்தவன். ஆனால், பலராமனோ, கண்ணனுக்கு முன் பிறந்து அவனுக்கு சேவை செய்தவன். தேவகியின் வயிற்றில் உதித்து தன் திருவடி சம்பந்தத்தால், தனக்குப் பின்னால் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தைக்கு, மற்ற 6 குழந்தைகளுக்கும் ஏற்பட்ட கதி வராமல், அவள் வயிற்றை புனிதமாக்கிய பேறு பெற்றவன் பலராமன். அதாவது பலராமனின் திருவடி சம்பந்தமே, கிருஷ்ணன் இப்பூமியில் அவதரித்து, கம்சனை அழித்து தர்மத்தை நிலைநாட்டியதில் ஒரு முக்கியக் காரணமாய் அமைந்தது!
"செம்போற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கு ஏலோர் எம்பாவாய்" எனும்போது, பகவான் மற்றும் அவனது அடியார்கள் ஆகிய இருவரின் அருளையும் இறைஞ்சுவது என்பது உள்ளுரையாம்!
குருபரம்பரை சம்பிரதாயப்படி, இப்பாசுரம் எம்பெருமானாரை (எந்தை ராமனுச முனியை) துயிலெழுப்புவதாகச் சொல்வதும் ஒரு ஐதீகம்! ஆண்டாளுக்கு "பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!" என்று வாழ்த்து பாடுவது வழக்கம். அடியவர் வாழ்வை உய்விக்க அவதரித்ததால், அடிவர்க்கு "அம்பரமே தண்ணீரே சோறே" என்று கோதை நாச்சியார் இப்பாசுரத்தில் அவரை போற்றுவதாகக் கொள்ளலாம்!
எம்பெருமானாரே, வைணவ அடியார்க்கு திருமந்திரம், த்வயம், சரம சுலோகம் என்ற மூன்றாகவும் இருப்பதாக அண்ணங்கராச்சார் சுவாமிகள் கூறுவார். அது போலவே, இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் பலராமரும், எம்பெருமானாரும் ஆதிசேஷ அவதாரங்கள் தானே!
எ.அ.பாலா
6 மறுமொழிகள்:
டெஸ்ட் !
அப்பரமே தண்ணீரே சோறே என்பதற்கு மட்டும் இத்தனை விளங்களா? குருவே வியப்பு நீங்க வெகு நேரமாகும்.
//அவள் வயிற்றை புனிதமாக்கிய பேறு பெற்றவன் பலராமன்// பலராமன் அவதரித்த கதை சற்று விளக்கி கூறுங்களேன்.
குருவே சரணம்.
ஆண்டாள் அரங்கன் திருவடிகளே சரணம்.
பட்ங்கள் அருமை. அழகு.
கட்டுரையோ பாமர மக்களை திருப்பாவை என்றாலே ஓட வைக்கும்; அவ்வளவு வடமொழி விளக்கங்கள்.
பாவம் ஆழ்வார்கள். வடமொழி தெரியாத தமிழனுக்கு செப்பினார்கள் திருமாலைப்பற்றி. வடமொழி தெரிந்த பார்ப்பனரே வைணவத்தை தமக்குள்ளே அமுக்கப்பார்க்க, ஆழ்வார்கள் தோன்றி, தமிழ்ப்படுத்தி, பாமாரனை இழுத்தார்கள் திருமால் பக்கம்.
அவர்களுக்குப் பின் தோன்றிய இராமானுஜர் அக்கடப்பணியே தன் தொண்டு (அஃகத்தாவது, வைணவம் அக்ரகாரத்தில் பார்ப்பனன் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு மறைந்து விடக்ககூடாதென்ற அவா) என்று தன் வாழ்நாளைக் கழித்தார்.
அவர் தொண்டால், தமிழகத்தில் வைணவம் தழைத்தது. பிறமத்ததாரை கலேபரம் அடைய வைத்தது.
அவர்கள் வஞச்கத்தால், அவரும் அவர்தம் சீடர்களும் பலபல தொல்லைகளுக்காணார்கள். தங்கள் உயிரையும் பலி கொடுத்தார்கள் வைணவத்திற்காக அவர்களுள் சிலர். தன்னிரு கண்களைப் பறிகொடுத்தார்கள் கூரேசரும், பெரிய நம்பியும்!
அவர்கள் ஒரே நோக்கம் பண்டிதனுக்கு மட்டுமேயன்றி, ஒன்றும் தெரியா பாமரனுக்கும் போய்ச் சேரவேண்டும் தம் மதம் என்பதே.
அய்யோ, பாவம் அவர்கள் எல்லாம்.
மீண்டும், திருமால் அகரகாரத்திற்கு காவடி தூக்கி விட்டார்.
Whither Srivaishanvam?
மின்னல்,
தினமும் வந்து திருப்பாவை வாசிப்பதற்கு நன்றி :)
அனானி,
வாசிப்புக்கும் தங்கள் வெளிப்படையான கருத்துக்கும் நன்றி.
தினம் ஒரு திருப்பாவை பாசுர விளக்கம் எழுத வேண்டியுள்ளது. சிலபல வடமொழிச் சொற்களுக்கு சரியான தமிழ்ப்பதங்கள் எனக்குத் தெரியாததால் (அவற்றைக் கண்டுபிடிக்க நேரமின்மையால்) நீங்கள் சுட்டிக் காட்டிய குறை நிகழ்ந்தது. அதே சமயம், பொதுவாக, ஆன்மீகவாதிகளுக்காகவே எழுதினேன். அக்ரகாரத்துக்கு அல்ல !
சற்று சிரமம் பாராமல், இவ்விடுகையில் உள்ள வடமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களை தாங்கள் வழங்கினால், மிக்க மகிழ்ச்சியடைவேன்.
இது ஒரு பொதுவான வேண்டுகோளும் கூட. வாசகர் யார் வேண்டுமானாலும் எனது திருப்பாவைப் பதிவுகளில் காணப்படும் வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை பின்னூட்டத்தில் சொன்னால், மிக்க நன்றியுடையவனாய் இருப்பேன்.
எ.அ.பாலா
நிறைய நிறைய தகவல்கள் பாலா. மீண்டும் ஒரு முறை என் விண்ணப்பத்தைத் தெரிவிக்கிறேன். விரைவில் 'கோதைத் தமிழ்' பதிவில் திருப்பாவை விளக்கங்களை மிக விரிவாக எழுத எண்ணியிருக்கிறேன். அப்போது தங்கள் இடுகைகளையும் உசாத்துணையாகக் கொள்ள எண்ணியிருக்கிறேன். தங்கள் அனுமதி வேண்டும். (அப்படியே எடுத்து இட மாட்டேன். இங்கிருக்கும் கருத்துகளை எடுத்துக் கொண்டு இன்னும் விளக்கங்களை விரிவாக எழுதுவேன். இவற்றை ஏற்கனவே வேறு உரைகளில் கண்டிருந்தால் அப்போதும் அப்படியே).
ஜூனியர்,
//நிறைய நிறைய தகவல்கள் பாலா. மீண்டும் ஒரு முறை என் விண்ணப்பத்தைத் தெரிவிக்கிறேன். விரைவில் 'கோதைத் தமிழ்' பதிவில் திருப்பாவை விளக்கங்களை மிக விரிவாக எழுத எண்ணியிருக்கிறேன். அப்போது தங்கள் இடுகைகளையும் உசாத்துணையாகக் கொள்ள எண்ணியிருக்கிறேன். தங்கள் அனுமதி வேண்டும்.
//
உங்களுக்கு இல்லாத அனுமதியா ? என் பதிவுகளில் உசாத்துணையாகக் கொள்ளும் அளவுக்கு விஷயம் இருக்கிறதா என்ன ? :)
நீங்கள் எழுதியபின், எனக்கு மடல் வழிச் செய்தி அனுப்பினால், வாசிக்க ஏதுவாக இருக்கும். சில சமயம், வாசிக்க வேண்டிய பதிவுகளை தவற விட்டு விடுகிறேன், அது தான்.
எ.அ.பாலா
Post a Comment